லக்னோ
பிரியங்கா காந்தி வரும் 21 ஆம் தேதி முதல் பிரயாக் ராஜ் நகரில் புனித நீராடி விட்டு பிரசாரத்தை துவங்க உள்ளார்.
பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். அத்துடன் உத்திரப்பிரதேச மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பாளராகவும் அவர் பணி புரிந்து வருகிறார். இந்த பகுதியில் உள்ள 42 மக்களவை தொகுதிகள் பிரியங்காவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி அவர் வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தி உள்ளார்.
தற்போது பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பலரும் புனித நீராடி வருகின்றனர். வரும் 21 ஆம் தேதி பிரியங்கா காந்தி திரிவேணி சங்கமத்தில் நீராடி விட்டு தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். பிரயாக் ராஜ் நகரில் ஜவகர்லால் நேருவின் இல்லம் அமைந்துள்ளது. நேருவின் இல்லத்தை பார்வையிட்ட பிறகு பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்,
வாரணாசி பகுதிகளில் பிரியங்கா மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய உள்ளார். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். தனது பயணத்தின் போது அவர் முக்கிய நகரங்களில் பேரணி நடத்த வேண்டும் எனவும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும் எனவும் உ. பி. காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.