இந்தியா எங்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் எனவும், புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் என்றும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு பின்னணியில் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது.
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்திய இந்தியா அந்நாட்டுக்கு வழங்கிய ’மிகவும் வேண்டத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது. மேலும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புல்வாமாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போதாது என்று, மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த இந்திய ராணுவம் பயிற்சி எடுத்து வருகிறது.
இந்த சூழலில் புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தொடர்ந்து பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. இருப்பினும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை கண்டித்தது. அப்போது, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுதியான ஆதாரத்தினை அளியுங்கள் என பாகிஸ்தான் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு வானொலியில் புல்வாமா தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,” புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் நலனுக்காக நடத்தப்பட்டது அல்ல. தீவிரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எல்லையில் ஊடுருவல் மூலம் 70 ஆயிரம் பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆதலால், தீவிரவாதம் குறித்து நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். ஆனால், எந்தவிதமான உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்திய அரசு எங்கள் மீது புல்வாமா தாக்குதலுக்கு குற்றம் சாட்டுகிறது. புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய அரசு தெளிவான, உறுதியான ஆதாரங்களை அளித்தால், நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்.
இந்தியா, பாகிஸ்தானில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும். இந்தியா தங்களின் உளவுத்துறையை முழுமையாகப் பயன்படுத்தி, புல்வாமா தாக்குதல் குறித்த ஆவணங்களைத் திரட்டினால், இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைத்து விசாரணை நடத்தி, தாக்குதலுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க நாங்கள் உதவுகிறோம்.
காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ராணுவத்தின் அடக்குமுறையால் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு தீர்வு காண முடியாது. புல்வாமா தாக்குதலுக்குப் பழிவாங்குவோம் என இந்திய அரசியல் தலைவர்கள் பேசுவதை நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவ்வாறு பாகிஸ்தான் மண்ணில் இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம். போரைத் தொடங்குவது எங்கள் கையில் இல்லை, தொடங்குவது எளிதானது. ஆனால், முடிப்பது கடினமானது.
இந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ளது. எங்கள் மீது குற்றம்சாட்டி, எளிதாக வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள். காஷ்மீரில் எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று எங்கள் மீது இந்தியா குற்றம் சாட்டி, எங்களை மீண்டும் மீண்டும் கசையடிக்கு ஆளாக்குகிறது. பாகிஸ்தான் மண்ணை யாராவது தீவிரவாதச் செயல்கள் செய்வதற்கு பயன்படுத்தினால், அவர்கள் எங்களுக்கு எதிரிதான்” என்று கூறினார்.