சென்னை:

திமுக, பாஜக  கட்சிகளிடையே கூட்டணி பேசப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி சம்பந்தாக கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வருவதால், அவரது வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மெகா கூட்டணியை ஏற்படுத்துவோம் என்று அறிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி அதற்காக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, த.மாகா உள்பட பல கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவுடன், பாஜக, பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தேமுதிக, த.மா.க போன்ற கட்சிகள் தொகுதி விஷயத்தில் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுடனான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று பிற்பகல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால்தான் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.