டோராடூன்:

காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட 4 பேர் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், மேஜரின் மனைவி அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

நேற்று   புல்வாமா மாவட்டத்தின் பின்க்ளான் என்ற பகுதியில், பதுங்கியிருந்த பயங்கரவாதி களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட 4 வீரர்கள் பலியாகினர்.

பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், 2 பயங்கரவாதிகள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 14ம் தேதி, சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தி, 40 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின், அதில் அகமது தார் என்பவருடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில்  மேஜர் விஎஸ் தவுன்டியால், கான்ஸ்டபிள் சிவராம், சிப்பாய் அஜய் குமார், ஹரி சிங் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர் குல்சார் முகமது ஸ்ரீநகரில் உள்ள பாதாம்பிபாஹ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர்  விஎஸ் தவுன்டியாலின் இறுதிச் சடங்கு இன்று டேராடூனில் நடைபெற்றது.  இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவரது  அவரின் மனைவி நிகிதா கவுல் கனத்த மவுனத்துடன், வாழ்வை பறிகொடுத்த நிலையில், அழுவதற்கு கண்ணீர் வரண்டு விட்ட நிலையில்,  கலந்துகொண்டார்.

நீண்ட நேரம் வீர மரணம் அடைந்த கணவரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், இறுதியாக ஒருமுறை அவருடன் பேசினார். அவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்குகள் நடைபெற்றன.

அவரது செயல், அங்கு இருந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பதினர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Video: Thanks – ANI