புதுச்சேரி:

வர்னருக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நடத்தி வந்த தர்ணா போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. அரசின் pசல கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக  நாராயணசாமி அறிவித்தார்.

மாநில அரசின் அதிகாரத்தில்  தலையிட்டு பிரச்சினை ஏற்படுத்தி வரும் புதுவை கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக  புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர்.  நேற்று 6வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

முதல்வரின் போராட்டம் காரணம்க கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, கடந்த 20ந்தேதி புதுவை திரும்பினார். இதைத்தொடர்ந்து, போராட்டம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு புதுவை முதல்வர் சில நிபந்தனைகளை கூறிய நிலையில், அதை ஏற்க மறுத்த கிரண்பேடி மீண்டும் முரண்டு பிடித்தார்.

இதற்கிடையில், புதுவை முதல்வரின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு குவிந்தது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா ஆகியோர் நேற்று புதுவை முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நாராயணசாமியின் தர்ணா போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,  நேற்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது.  இதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவித்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும்  ஓய்வூதியம், இலவச அரிசி, காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஆளுநர் அவர்கள் ஏற்றுக் கொண்டார் என்றும்,  அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கப்பட்டு விட்டதால்,   6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி மாநில உரிமைக்காக நடைபெற்ற 2வது மிகப்பெரிய போராட்டம் இது என கூறினார்.  போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.