தூத்துக்குடி
புல்வாமா தாக்குதலில் மறைந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீர் மாவட்டத்தில் புல்வானா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். அபாயம் நேரிடலாம் என்பதால் இந்த சிஆர்பிஎஃப் வீரர்களை வான் வழியாக அழைத்துச் செல்ல கோரிக்கை விடப்பட்டும் அதை சிஆர்பிஎஃப் தலைமை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தமிழகத்தில் சுப்ரமணியன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரின் உடலும் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேணி, “என் கணவர் எங்கள் திருமணத்துக்கு பிறகு ஆறு முறை வந்துள்ளார். அப்போது அவர் ஒரே நேரத்தில் கான்வாய் வாகனங்கள் 2 அல்லது 3 மட்டுமே செல்லும் என கூறி இருக்கிறார்.
ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவத்தில் 2500 வீரர்கள் ஒரே நேரத்தில் 70 வாகனங்களில் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் சதி ஏதோ நடந்துள்ளதாக தோன்றுகிறது. என் கணவரைப் போல் பலர் இந்த தாக்குதலில் இறந்து அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உடல் ஊனமுற்றுள்ளனர்.
வழக்கமாக அனுப்புவது போல் அனுப்பாமல் தற்போது ஜம்மு கேம்பில் இவர்களை 30 நாட்கள் தங்க வைத்து அதன் பிறகு ஒரே நேரத்தில் அனைவரையும் ஸ்ரீநகருக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆகையால் இதில் சதி ஏதும் உள்ளதா என்பதை அரசு விசாரித்து பதில் அளிக்க வேண்டும். என்னைப் போல் இனி வேறு யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக இதை நான் கேட்கிறேன்” என தெரிவித்துள்ளார்.