பெங்களூரு:

ர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கலைக்க முயற்சி மேற்கொண்டு வரும் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எடியூரப்பா மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது.  மாநில முதல்வராக குமாரசாமி பதவி ஏற்ற நிலையில், துணைமுதல்வராக கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வராவும் மற்றும் கூட்டணி மந்திரிசபையும் அமைக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். சமீபத்தில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏ க்களை தங்கள் அணிக்கு இழுத்துக்கொண்ட பாஜக, மேலும் சில காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகிறது. இதில் சில எம்எல்ஏக்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்படாமல் சட்டமன்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏ மகனிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, விசாரணை நடத்த மாநில அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. இந்த நிலையில், எடியூரப்பா மற்றும் 3 பாஜகவினர் மீது மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ராய்ச்சூர் மாவட்ட காவல்துறை, எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்துள்ளது. அவருடன்  ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏ மகன் சரணாகவுடா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவர்களுடன் தேவதுர்கா தொகுதி எபாஜக எம்எல்ஏ சிவன்கவுடா நாயக் மற்றும் ஹசன் தொகுதி பிரிதம் கவுடா ஆகியோர் மீதும் கிரிமினல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.