புதுச்சேரி:

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கும் கவர்னர் கிரண்பேடி யின் நடவடிக்கையை கண்டித்து, மாநில முதல்வரான நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, மாநில அரசை விட தனக்குத்தான் பவர் அதிகம் என அவ்வப்போது தனது அதிரடி நடவடிகைகள் மூலம் வெளிப்படுத்தி வருவார். சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற உத்தரவுகளை கிரண்பேடியின் உத்தரவின்பேரில், மாநில டிஜிபி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் நாராயணசாமி, ஹெல்மெட்  குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு, கட்டாயமாக்க வேண்டும் என கூறினார். ஆனால், கிரண்பேடி அதை ஏற்க மறுத்து, உடடினயாக அமல்படுத்தினார். இதன் காரணமாக பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரகின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதால், அதிருப்தி அடைந்த முதல்வர் நாராயணசாமி  அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, அனைவரும்  கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே வந்து ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அவருடன் அமைச்சர்களும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வரே போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். போராட்டம் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆளுநருக்கு எதிராக ஒரு மாநில முதல்வரே போராட்டம் நடத்துவது இந்திய வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.