சென்னை

ன்லைன் உணவு வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் அளித்த உணவில் இரத்தக் கறை படிந்த பேண்ட் – எய்ட் பிளாஸ்திரி கிடந்துள்ளது.

தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு உணவு வழங்கப்படும் நிறுவனங்களின் சேவையை பலரும் பயன் படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் அது குறித்து வரும் செய்திகளைக் காணும் போது நமக்கு பயத்தை உண்டாக்கி வருகிறது. ஏற்கனவே சொமோட்டோ நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய உணவில் தான் சிறிது சாப்பிட்டு விட்டு அளித்த வீடியோ வெளியாகி மக்களை அதிரச் செய்தது.

தற்போது ஸ்விக்கி நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு குறித்து சற்றே வயிற்றை புரட்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் தீனதயாளன் என்பவர் ஸ்விக்கி மூலம் தமது பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். நல்ல பசியுடன் இருந்த அவர் அதை உண்ணும் போது உணவின் இடையில் இரத்தக்கறை படிந்த பாண்ட் எய்ட் பிளாஸ்திரி ஒன்றை கண்டுள்ளார்.

அதற்கு பிறகு அதை மேலும் உண்ண அவருக்கு மனம் வரவில்லை. உடனடியாக இது குறித்து அவர் அந்த உணவு விடுதியிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை. அத்துடன் அவருக்கு மாற்று உணவு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அவர் இது குறித்து படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அந்த பதிவில், “ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரத்தக்கறை படிந்த பாண்ட் எய்ட் பிளாஸ்திரி ஒன்று கிடைத்தது. பாதி சாப்பிட்ட பிறகே நான் இதை பார்த்தேன். உடனடியாக உணவு விடுதியை தொடர்பு கொண்டபோது அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் எனக்கு மாற்று உணவும் அளிக்கவில்லை. யாருக்கு அப்படிப்பட்ட உணவை மேலும் உண்ண மனது வரும்?

ஸ்விக்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவோ அவர்கள் செயலி மூலம் புகார் அளிக்கவோ வசதிகள் இல்லை. அந்த செயலி மூலம் உணவு வரவில்லை என்றால் மட்டுமே புகார் அளிக்க முடியும். அவர்களுடன் உரையாட மட்டுமே முடியும்.

எனது உரையாடலுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நான் பொது சுகாதாரத்தை பாதுகாக்காத அந்த உணவு விடுதி மீதும் அத்தகைய உணவு விடுதியை தனது பட்டியலில் வைத்துள்ள ஸிக்கி மீதும் வழக்கு தொடுக்க போகிறேன்” என பதிந்துள்ளார்.

இது மிகவும் பரபரப்பானது. இதற்கு இரண்டு நாட்கள் கழித்து உணவு விடுதி உரிமையாளர் தீனதயாளனை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தனது பதிவை தீனதயாளன ஸ்விக்கியின் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அதற்கு ஸ்விக்கி, ”நாங்கள் ஸ்விக்கி வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.   அப்படி இருந்தும் எங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு இது போல நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறோம். இது எங்கள் சேவைக்கு சரியான நிகழ்வு இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.

இதில் தொடர்புள்ள உணவு விடுதி தனது பக்கம் தவறு உள்ளதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் இனி நாங்கள் அந்த உணவு விடுதியில் இருந்து எந்த உணவும் வழங்க மாட்டோம். இது குறித்து மேலும் விசாரணையை ஸ்விக்கி நடத்தி வருகிறது” என பதில் அளித்துள்ளது.

இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளன. அதில் பலரும் தங்களுக்கு ஸ்விக்கி மூலம் அளிக்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் போன்ற பொருட்கள் இருந்ததை சுட்டிக் காட்டி உள்ளனர்.