புதுடெல்லி:

அரசு நிகழ்ச்சியிலும் கட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பயணத்துக்கான செலவு யாரால் செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.


மக்களவைக்கு தேர்தல் வர இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஜனவரி 1-ம் தேதியிலிருந்து 27 முறை உள்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 18 மாநிலங்களுக்கு சென்ற அவர், சில மாநிலங்களுக்கு மீண்டும் சென்றுள்ளார்.

இந்த சுற்றுப் பயணம் எல்லாம் அரசு நிகழ்ச்சியோடு கட்சி பொதுக்கூட்டமும் இணைத்தே திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி 3-ம் தேதி பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞான மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் பாஜக ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அதேபோல், ஒடிசா பயணம், தமிழகத்தில் மதுரை, திருப்பூர் பயணம் வரை அரசு நிகழ்ச்சியும், கட்சி நிகழ்ச்சியும் ஒரே நாளில் நடந்தது.

அரசு நிகழ்ச்சியிலும், கட்சி நிகழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் பிரதமர் கலந்து கொள்வதால், பயண நேரம் மிச்சம் என்று பாஜக தரப்பில் கூறுகின்றனர்.

பயணச் செலவை யார் ஏற்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு நிகழ்ச்சி என்றால் அரசு கொடுக்கும். கட்சி நிகழ்ச்சிக்கும் அரசே கொடுக்குமா? என்ற கேள்விக்கு  பதில் இல்லை.

பிரதமர் வெளிநாட்டு பயணத்துக்கான செலவு குறித்த விவரம் மட்டுமே தங்களிடம் இருப்பதாகவும், உள்நாட்டு பயணத்துக்கான செலவு விவரத்தை தாங்கள் வைத்துக் கொள்வதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் வரை எந்த பிரதமரும் கட்சி நிகழ்ச்சிக்கு அரசு செலவில் சென்றதில்லை என்பது அவர்களது ஆலோசகர்களாக இருந்தவர்களிடம் கேட்டபோது தெரியவந்தது.