டில்லி
ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார்.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் மத்திய பாஜக அரசு அதை மறுப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ரஃபேல் விமான கொள்முதல் குறித்து பாதுகாப்புத் துணைக்கு இணையாக பிரதமர் அலுவலகம் பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் அந்த தகவலை வெளியிட்ட பிரபல பத்திரிகையான தி இந்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான மனோகர் பாரிக்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரியது.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
கடந்த 2015 ஆம் வருடம் மார்ச் மாதம் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரெஞ்ச் நாட்டுக்கு பயணம் செய்துள்ளார். அப்பொது அவர் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யுவஸ் டிரியன் அலுவலகத்துக்கு சென்று அவரையும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாகவும் குறுகிய கால அறிவிப்புக்கு பின்பும் நடந்துள்ளது.
அந்த சந்திப்பில் அனில் அம்பானி தமது நிறுவனம் வர்த்தக மற்றும் பாதுகாப்புத் துறைக்க்கான ஹெலிகாப்டர்கள் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இரு வாரங்களில் நடைபெறும் இந்திய பிரதமர் பயணத்தின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமது நிறுவனம் தயாரித்து கையெழுத்திடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது 2015 ஆம் வருட்ம் ஏப்ரல் மாதம் 9 முதல் 11 ஆம் தேதி வரை பிரதமர் பிரான்சில் பயனம் செய்வார் என்பதை அனில் அம்பானி முன் கூட்டியே அறிந்திருந்தார்.
அதன் பிறகு ரஃபேல் விமானம் வாங்க உள்ளதாக மோடி பிரான்சில் ஏப்ரல் மாதம் அறிவித்த போது பிரதமரின் குழுவில் அனில் அம்பானி இடம் பெற்றிருந்தார். அதே நேரத்தில் ரஃபேல் விமானங்களை இந்தியாவில் செய்ய ஒப்பந்தம் செய்யபட்ட ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி பிரெஞ்ச் பயணத்துக்கு பிறகு 2015 ஆம் வருடம் மார்ச் மாதம் 28 ஆம் தேதொ தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் பிரெஞ்ச் நாட்டுக்கு கிளம்புவதற்கு முதல் நாள் வெளியுறவுத் துறை செயலர் ஜெயசங்கர், “ரஃபேல் விமானம் கொள்முதல் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக அறிகிறேன். இந்த பேச்சு வார்த்தைகள், பாதுகாப்பு அமைச்சகம், எச் ஏ எல் நிறுவனம், மற்றும் பிரெஞ்சு நிறுவனத்தின் இடையே நடைபெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கும் நாட்டுத் தலைவர்கள் பயணத்துக்கும் தொடர்பு உள்ளதாக கருதக் கூடாது. : என செய்தியாளர்களிடம் தெரிவித்டார்.
பொதுத் துறை நிறுவனமான எச் ஏ எல் நிறுவனம் அப்போது 108 ரஃபேல் விமானங்களை உருவாக்கும் உரிமம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின் போது அந்த நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பிரெஞ்ச் நிறுவனமான டசால்ட் உடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் முக்கிய பங்குதாரர் ஆக அறிவிக்கப்பட்டது. மொத்த மதிப்பான ரூ.30,000 கோடியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு என்பதை இன்றுவரை யாரும் உறுதி செய்யவில்லை.
டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தை தொடங்கின. இதில் 51% ரிலையன்ஸ் மற்றும் 49% டசால்ட் என பங்கு பிரிக்கப்பட்டு நாக்பூரில் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. டசால்ட் இதுவரை ரூ.40 கோடி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் இன்னும் 5 வருடங்களுக்குள் அந்நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்யும் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் பிரஞ்ச் அதிபர் ஃப்ரான்கோயிஸ் ஹாலந்தின் மனைவி ஜூலி யின் திரைப்பட நிறுவனத்துக்கு அனில் அம்பானி பண முதலீடு செய்துள்ளதாக வந்த தகவலால் அனில் அம்பானியின் நிலை மேலும் சிக்கலானது. இந்த முதலீடு இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்குப் பிற கு செய்யபட்டுள்ளது.
ஹால்ந்த், “நாங்கள் அனில் அம்பானியின் நிறுவனம் குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இந்திய அரசு ரிலையன்ஸ் குழுமத்தை பரிந்துரை செய்தது. டசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானி பேசி உள்ளார். ஆகவே எங்களுக்கு வேறு வழி இல்லாமல் நாங்கள் அனில் அம்பானியின் ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம்” என ஒரு இணைய தளத்தில் கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தெரிவித்தார்.
டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை தங்கள் பங்குதாரர் ஆக்கியது தங்கள் நிருவன முடிவு என சொல்லி உள்ளது. அத்துடன் பிரான்ஸ் அரசு ”இந்திய நிறுவனத்தை பிரஞ்சு நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் நாங்கள் ஒன்றும் தலையிட முடியாது. நாங்கள் மட்டுமின்றி இந்திய அரசும் இதில் ஏதும் செய்ய முடியாது: என தெரிவித்துள்ளது.