டில்லி

வேலை கிடைக்காததால் பல பட்டதாரி இளைஞர்கள் சாதாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த தேர்தல் அறிக்கையில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வேலை இன்மை அடியோடு அழிக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இன்னும் பலர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமரும் அவரை சேர்ந்தவர்களும் பகோடா விற்பதும் வேலை வாய்ப்பு என கூறியது கடும் போராட்டத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வேலை இன்மை காரணமாக தெருவோரங்களில் பல பட்டதாரி இளைஞர்கள் சிறு வியாபாரிகளாக ஆகி உள்ளனர். 21 வயதான சாகர் டில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்த பி காம் பட்டதாரி ஆவார். அவர் தற்போது சாலை ஓரத்தில் ஒரு சிறு உணவுக்கடை நடத்தி வருகிறார்.

அவர் முட்டையை அடித்துக் கொண்டே, “எனது தந்தை சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். எனது தங்கைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். நான் இந்த கடையை நடத்திக் கொண்டே பட்டப்படிப்பை முடித்தேன். முட்டை விற்க பட்டப்படிப்பு எதற்கு என நான் மோடியை கேட்கிறேன்” என கோபத்துடன் தெரிவித்தார்.

டில்லியில் துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் வசிக்கும் 24 வயதான சீமா பகுதி நேர சமையல் பணி செய்து வருகிறார். இவரும் பட்டப்படிப்பு முடித்தவர். ஏதேனும் ஒரு அலுவலகத்தில் வேலை கிடைக்காதா என எதிர் நோக்கி உள்ளார். தட்டச்சு மற்றும் கணிதத்தில் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாவர் ஆவார். ஏதேனும் அரசு அலுவலகத்தில் சிறு பணி கிடைத்தாலும் போதும் என்னும் நிலையில் தற்போது சீமா உள்ளார்.

ஏற்கனவே வேலை இன்மை குறித்த ஆய்வறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டதாகவும் அதை அரசு வெளியிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின. அதில் கடந்த 45 வருடங்களில் தற்போது வேலை இன்மை மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இது தவறான தகவல் என கூறிய மோடி அரசு ஆனால் உண்மையில் வேலை அற்றோர் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

மேலே குறிப்பிட்ட சாகர் மற்றும் சீமா என்போர் லட்சக்கணக்கான இளைஞர்களில் இருவர் ஆவார்கள். இதைப் போல் பலர் வேலை இன்மையால் வாடி வருகின்றனர். அத்துடன் பலர் வேலை இன்மையால் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். மகாராஷ்டிர, குஜராத், அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டதாரி இளைஞர்கள் கூலி வேலையில் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் “இந்த வேலை இல்லா திண்டாட்டத்தினால் உயர்வு தாழ்வு நிலை அதிகரிக்கும். இது பல இளைஞர்களை தாழ்வு மனப்பான்மையில் ஆழ்த்துவதோடு அவர்கள் வன்முறையின் பக்கம் செல்லவும் நேரிடலாம். மொத்தத்தில் இந்த வருட மக்களவை தேர்தலில் இது நிச்சயம் எதிரொலிக்கும்” என தெரிவித்துள்ளார்.