சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, வரும் 8ந்தேதி பிற்பகல் பதவி ஏற்கிறார். இவ்விழாவில் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரியை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமனம் செய்தது.
அதைத்தொடர்ந்து மூத்த தலைவர்களிடம் ஆசி பெற்ற கே.எஸ்.அழகிரி வரும் 8ந்தேதி தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்கிறார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கே.எஸ்.அழகிரி,.வரும் 8ந்தேதி மாலை 3 மணி அளவில் சென்னை சத்திய மூர்த்தி பவனில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான சஞ்சய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன் என்றும், என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்தகுமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள் .
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.