பேஸ்புக் சமூக வலைதள கணக்கை ஒரு மாதம் டிஆக்டிவேட் செய்து பாருங்கள், மகிழ்ச்சியாக வாழலாம் என நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளது.
இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலோனோர் வலைதளங்களில் மேய்வதையே தங்களது முக்கிய குறிக்கோளாக நினைத்து, தேவையானதை விட தேவையற்றைதையே தேடி அலைகின்றனர்.
குறிப்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற வலைதள சேவைகளே கதியென கிடக்கின்றனர். சொல்லப்போனால் இந்த சமூக வலைதளங்கள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதே உண்மை.
மனித உறவுகளின் தொடர்பை மேம்படுத்துவதற்காக வந்த சமூக வலைதளங்கள், இன்று பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாக உருவெடுத்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக உளவியல் துறை நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதள பயன்பாட்டில் இருந்தால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரிக்கும் என அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்திருந்தது.
அதிகரிக்கும் சமூகவலைத்தளப் பயன்பாடுகள், இளைய தலைமுறையினரை நிஜஉலகில் இருந்து தனிமைப்படுத்துவதாகவும் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு மற்றும் நியூயார்க் யுனிவர்ச்சியின் ( NYU) ஆய்வுகள் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக உளவியல் துறையினரின் ஆய்வையே பிரதிபலித்து உள்ளது.
சமூக வலைதளங்களின் நல விளைவுகள் (The Welfare Effects of Social Media) எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது.
சமூக வலைதளங்களில், பேஸ்புக் வலைதளமே அதிக அளவிலான பேரை அடிமையாக்கி வைத்துள்ளது என்று தெரிவித்து… இதன் காரணமாக பலர் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை தொலைத்துவிட்டனர் என்றும் எச்சரித்து உள்ளது.
ஒருவர் தனது பேஸ்புக் கணக்கை ஒரு மாதம் டீஆக்டிவேட் (மூடுதல்) செய்து விட்டு, தங்களது அன்றாட பணிகளை கவனியுங்கள்… நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை காணலாம் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட நியூயார்க் பல்கலைக்கழகம், சராசரியாக குறைந்த பட்சம் ஒருவர் ஒரு மணி நேரமாவது பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கத்தில் உள்ளனர். இதுவே குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு உங்களை அதற்கு அடிமையாக்கி விடுகிறது என்று எச்சரித்துள்ள ஆய்வு முடிவுகள், பேஸ்புக் கணக்கை டீ ஆக்டிவேட் செய்தால், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க லாம், நிஜ உலகோடு தொடர்பில் இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை என்றும், குறிப்பாக குடும்பத்தோடும் நண்பர்களோடும் நீண்ட நேரத்தை செலவு செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
அதேவேளையில், பேஸ்புக்கின் மூலம் செய்திகளை அறிந்து கொள்வது, சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவது, தொலை தூர நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது என பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைத்தாலும், அதன் பயன் நிஜ உலகோடு தொடர்புடையவர்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டு உள்ளது.
ஒருவர் பேஸ்புக் வலைதளத்துக்கு அடிமையாகி விட்டால் நீங்கள் வாழும் சமூகத்தை விட்டு பிரிக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சுமார் 2500க்கும் அதிகமானோரிடம், அவர்களின் அன்றாட சமூக வலைதள பயன்பாடு களையும், அவர்களின் பேஸ்புக் அக்கவுண்டை ஒரு மாதம் டிஆக்டிவேட் செய்தும் நடத்தப்பட்ட ஆய்வில், பேஸ்புக் மூடப்பட்ட காலங்களில், அவர்கள் மன அமைதி மற்றும் நிம்மதியுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.