ஐசாவால்
மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் மிசோரம் பாஜக கலைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜான் ஹிலுனா மிரட்டி உள்ளார்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடி பெயர்ந்தவர்களில் இஸ்லாமியரை தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழஙக் உள்ளது. இதற்கு எல்லைப் புற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மிசோரம் மாநில ஆளும் கட்சியான மிஜோ தேசிய கூட்டணி இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பாஜகவின் இந்த மசோதாவுக்கு பாஜகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மிசோரம் மாநில பாஜக தலைவர் ஜான் ஹிலுனா, “மிசோரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிசோரம் மாநில பாஜக முன்னுரிமை அளிக்கிறது.
இம்மாநில மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்கள் அதற்கு செவி சாய்ப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த மசோதாவை திரும்ப பெறவில்லை எனில் நாங்கள் மிசோரம் மாநில பாஜகவை கலைத்து விட எண்ணி உள்ளோம். அல்லது வடகிழக்கு மாநிலங்களை நாட்டில் இருந்து விலக்கி விடலாம் என நான் அரசுக்கு கூறிக் கொள்கிறேன்.
இந்த மாநிலத்தில் அதிகம் உள்ளகிறித்துவர்கள் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். மாநில கிறித்துவ மக்கள் சார்பாக அனைத்து தேவாலயங்களிலும் இந்த மசோதா தோல்வி அடைய வேண்டும் என கூட்டுப் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சட்ட மசோதாவுக்கு பாஜகவினரே எதிர்ப்பு தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.