கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க மீண்டும் முயற்சி… எடியூரப்பா கையில் 6 காங்.எம்.எல்.ஏ.க்கள்?
கர்நாடக மாநிலத்தில் 30 சொச்சம் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி,காங்கிரஸ் தயவில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் –போதிய மெஜாரிட்டி இல்லாத சூழலிலும் டெல்லி ஆசீர்வாதம் இருந்ததால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் –பா.ஜ.க.வின் எடியூரப்பா.மாற்றுக்கட்சிகளுக் கு நிறைய வாக்குறுதிகள் கொடுத்து தூண்டில் போட்டும் -பெரும்பான்மை கிடைக்காததால் ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் குமாரசாமி முதல்வர் ஆனார்.முதல்வர் நாற்காலியில் ஒரு நாள் மட்டுமே இருந்த எடியூரப்பா தூக்கம் தொலைத்தார். அதனை குமாரசாமியிடம் இருந்து பிடுங்க ‘ஆபரேஷன்-தாமரை’என்ற திட்டத்தை இருமுறை கையாண்டும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
பண ஆசை காட்டியும்,அச்சுறுத்தியும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க மேற்கொண்ட ஆபரேஷன் –தாமரை தோல்வியில் முடிந்தது.
பா.ஜ.க.வில் மோடி ஒரு புது சிஸ்டத்தை கொண்டு வந்திருப்பது ஊர் அறிந்த விஷயம். 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பதவி கிடையாது என்பதே –அந்த சிஸ்டம்.
அத்வானி,எம்.எம்.ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு இந்த விதியை காட்டித்தான் மந்திரி பதவி மறுக்கப்பட்டது.எனவே 75-ஐ நெருங்கி கொண்டிருக்கும் எடியூரப்பா –கடைசி முயற்சியாக –ஆபரேஷன்-தாமரை 3ஆம் பாகத்தை நாளை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.அப்போது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பது அவரது திட்டம்.இதற்கான ஆட்களை அவர் பிடித்து விட்டதாக தெரிகிறது.
இதனை உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்த குமாரசாமி-தெற்கு கர்நாடக பகுதியை சேர்ந்த சில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை தன் வசம் கொண்டு வந்திருக்கிறார்.
இதனை அவர் சூசகமாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
பட்ஜெட் கூட்டத்தை யொட்டி ,பெங்களூருவில் குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு விருந்து அளித்தார்.அப்போது பேட்டி அளித்த அவர்,’’எனது அரசை கவிழ்க்க எடியூரப்பா முயன்றால், பா.ஜ.க.வில் உள்ள எனது நண்பர்கள் இந்த அரசை காப்பாற்ற முன் வருவார்கள்’’ என்று பூடகமாக தெரிவித்து- பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனது பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியுள்ளார்.
கர்நாடக அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கவிழுமா? என்பது நாளை தெரியும்.
–பாப்பாங்குளம் பாரதி