மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா?

‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து

னலில் தகிக்கிறது மேற்கு வங்காள மாநிலம்.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தேர்தலை மறந்து விட்டார்கள்.அடுத்தது என்ன என்று அவர்களது பார்வை கொல்கத்தாவை உற்று  நோக்கியே உள்ளது.

‘சிட்பண்ட்’விவகாரம் சி.பி.ஐ.அதிகாரிகளை சிறைவைக்கும் அளவுக்கு சென்றிருப்பது நாட்டில் இதுவே முதல் முறை.

மம்தா பானர்ஜி

சாரதா என்ற நிதி நிறுவனத்தின் பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக –கொல்கத்தா காவல்துறை ஆணையாளர் ராஜீவ்குமார் வீட்டுக்கு  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு  செல்ல-அவர்கள் உள்ளூர் போலீசாரால் சிறை வைக்கப்பட-

சி.பி.ஐ.யை ஆட்டுவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போர்க்கோலம் பூண்டுள்ளார்.

கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் மம்தா ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு எதிர் கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.

மம்தாவின் இந்த போருக்கு ராகுல் காந்தி ஆதரவு கொடுக்க- அவரின் இந்த நடவடிக்கையால் அந்த மாநில காங்கிரசார் அதிருப்தி அடைந்திருப்பது தனிக்கதை.

மத்திய அரசுடன் மல்லுக்கு நிற்கும் மம்தாவுக்கு பாடம் கற்றுக்கொடுக்க, அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படலாம் என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த செய்திக்கு  வலு சேர்க்கும் வகையில் மே.வங்க ஆளுநர் திரிபாதி , மத்தியஅரசுக்கு திடுக்கிடும் தகவல்களுடன் கூடிய ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

சி.பி.ஐ.அதிகாரிகளை உள்ளூர் போலீசார் அடித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதிஷ்குமார்

என்ன நடக்கும் மே.வங்காளத்தில்?

இந்த கேள்வியை  பீகார் முதல்வரும், பா.ஜ.க.வின் புதிய கூட்டாளியுமான நிதீஷ்குமாரிடம் கேட்டபோது அவர் பூடகமாக அளித்த பதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

‘’சி.பி.ஐ.க்கும்,மே.வங்க மாநில அரசுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்கள் தான் விளக்க வேண்டும்.மற்றவர்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை’’என்று கூறி நிறுத்திய நிதீஷ்-‘’ இன்னும் ஒரு மாதத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என்று  ‘சஸ்பென்ஸ்’ வைத்தார்.

‘’காங்கிரஸ் அரசாங்கம் தான் விரும்பிய போது பல மாநிலங்களில் ஜனாதிபதி  ஆட்சியை அமல் படுத்தவில்லையா?’’  என்று அவர் எழுப்பிய கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கலாம்.

—பாப்பாங்குளம் பாரதி