அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா…
அண்ணனை அரியணையில் எற்றிட அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்…
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட போது அவர் இந்தியாவில் இல்லை . அமெரிக்கா சென்றிருந்தார்.தனிப்பட்ட பயணம்.சிகாகோவில் இருந்ததாக தகவல்.
‘’பதவி தருவோம்.. பதிலுக்கு வெற்றி தர வேண்டும்’’ என்று அம்மா சோனியாவும்,அண்ணன் ராகுலும் முன் கூட்டியே ‘பயம்’காட்டி இருந்தாலும், அமெரிக்க பயணத்தில் தான் அவருக்கு அதிகாரப்பூர்வ செய்தி எட்டியது.
அங்கேயே அவரது திட்டமிடல் தொடங்கி இருக்கும்.
பதவி கொடுக்கப்பட்டு பதினைந்து நாட்களுக்கு பிறகு பிரியங்கா நேற்று (திங்கள் கிழமை) டெல்லி வந்திறங்கினார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக அம்மா வீட்டுக்கு சென்று அம்மாவையும்,அண்ணனையும் சந்தித்து பேசினார்.
அடுத்தது என்ன?
உ.பி.யில் 32 எம்.பி.தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு பகுதியில் காங்கிரசை வென்றெடுக்கும் சவாலான பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உ.பி.காங்கிரசார் ,பிரியங்கா வருகையை எதிர்பார்த்து பூச்செண்டுகளுடன் லக்னோவில் காத்திருக்க- அவரது அதிகாரப்பூர்வ அரசியல் அரங்கேற்றம் நாளை மறுநாள் (7 ஆம் தேதி) நிகழ உள்ளது.
அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருக்கிறார்-ராகுல் .அதில் பங்கேற்கிறார் பிரியங்கா.இதன் தொடச்சியாக 9 –ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்திலும் இளம் தலைவி கலந்து கொள்கிறார்.
இரு கூட்டங்களில் எதிரொலிக்கும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு-லக்னோ பறக்கிறார்.தந்தை,தாயார் மற்றும் சகோதரனுக்காக ஏற்கனவே அவர் பிரச்சாரம் செய்திருந்தாலும்-இந்த முறை அவரது பயணம் -அண்ணனை அரியணையில் ஏற்றும் சாகசப்பயணமாக இருக்கும்.
மனதுக்குள் நிச்சயம் வஞ்சினமும் இருக்கும்.
குடி உரிமையை சுட்டிக்காட்டி –அம்மாவை பிரதமராக விடாமல் தடுத்ததால் உருவான வஞ்சினம்.
கணவர் மீது மோடி அரசு தொடுக்கும் சங்கிலி தொடர் வழக்குகள் –நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக சோனியா மற்றும் ராகுல் மீது பாய்ந்துள்ள வழக்குகள் போன்றவை பிரியங்கா மனதுக்குள் ஆத்திரத்தை தாண்டிய ஒரு உணர்ச்சியை தோற்றுவித்திருக்கும்.
உச்சமாக-
கடந்த தேர்தலில் வென்ற இரு தொகுதிகளை மட்டும் இரந்து கொடுத்து விட்டு-தாராளம் காட்டியதாய் பீற்றிக்கொள்ளும் அகிலேஷ்-மாயாவதி மீதான வஞ்சினம் என உடல் தகித்து-
உ.பி.முழுவதும் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டியது போல் ‘துர்க்கை’ அவதாரம் எடுத்தே உ.பி.மண்ணுக்குள் நுழையப்போகிறார், பிரியங்கா.
—பாப்பாங்குளம் பாரதி