சென்னை:
மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அத்துமீறி நுழைந்த நடவடிக்கை எடுக்க முற்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு முதல் மத்தியஅரசுக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கொல் கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நேற்று 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வந்தனர். ஆனால், மாநில காவல்துறையினரால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தூண்டுதலால்தான் சிபிஐ அத்துமீறி நுழைந்ததாகவும், மாநில அரசை கலைக்கும் நோக்கிலேயே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார். ராஜீவ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியலமைப்பை பாதுகாப்போம் (Save Constituency) என்ற பெயரில் அவர் நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரசின் மூத்த தலைவர் அகமது படேல், காஷ்மீர் முன்னாள் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மம்தாவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான அமைப்பும், பாசிச பாஜக அரசுடன் சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும் காப்பாற்ற போராடி வரும் மமதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோல புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான நாராயணசாமியும் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
மத்திய பாஜக அரசு, தனக்கு எதிரான மாநில அரசுகளிடம், சிபிஐயை தவறான பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், நாங்கள் அனைவரும் மேற்கு வங்க முதல்வருக்கு பக்கபலமாக நிற்கிறோம் என்றும், மோடி அரசின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.