கொல்கத்தா

கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரை விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மேற்கு வங்க மாநில அரசு சிபிஐ க்கு மாநிலத்தில் விசாரணை செய்ய அளித்த பொது அனுமதியை ரத்து செய்துள்ளது. அதை ஒட்டி எந்த ஒரு வழக்கிலும் சிபிஐ விசாரணை செய்ய நேர்ந்தால் அது குறித்து அம்மாநில முதல்வரிடம் சிபிஐ கோரிக்கை விடுக்க வேண்டும்.    அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் அனுமதி அளித்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசு தனக்கு பிடிக்காத மாநிலங்களில் தேவை இல்லாமல் சிபிஐ அதிகாரிகளின் சோதனைகளை நிகழ்த்துவதாகவும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர இந்த தடை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜிவ் குமார் மீது ஒரு புகார் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அது குறித்து அவரிடம் விசாரணை செய்ய சிபிஐ அதிகாரிகளின் குழு ஒன்று கொல்கத்தா வந்துள்ளது. அவர்கள் விசாரணைக்கு முதல்வர் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.,

 

அதை ஒட்டி மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க காவல்துறை அந்த சிபிஐ அதிகாரிகளை அதிரடியாக கைது செய்துள்ளது. தற்போது அந்த சிபிஐ அதிகாரிகள் குழு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.