டில்லி
நிதி இன்மை காரணமாக கிரீன்பீஸ் இந்தியா என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் தனது டில்லி அலுவலகத்தை மூடி உள்ளது.
சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியா நம் நாட்டின் பல நகரங்களில் இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டுஅதற்கு கேடு விளைவிக்கும் பல தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களை எதிர்த்து இந்நிறுவனம் போராடி வந்தது. இந்த நிறுவனத்துக்கு பல வெளிநாடுகள் நிதி உதவி அளித்து வந்தன. அதன் மூலம் இந்த தொண்டு நிறுவனம் 300 பணியாளர்களுடன் இயங்கி வந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்த அன்னிய நிதி உதவி சட்டத்தினால் இந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி நின்று போனது. அத்துடன் அரசு சார்பில் இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனால் அந்த தொண்டு நிறுவனம் இயங்க மிகவும் சிரமப்பட்டு போனது.
இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் தியா, “கடந்த 2015 ஆம் வருடம் எங்கள் தொண்டு நிறுவனம் நிலக்கரி மூலம் இயங்கும் பல மின் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இதனால் அரசு ஆதரவு பெற்ற பல தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எங்கள் மீது பொய்ப் புகார்கள் அளித்தன. அதை ஒட்டி அரசு நடவடிக்கை எடுத்தது.
நாங்கள் சரியான கணக்கு வைத்திருந்த போதிலும் அரசு எங்களுக்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு நிதி உரிமைத்தை ரத்து செய்தது. அது மட்டுமின்றி எங்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. எங்களுக்கு உள்நாட்டு நிதி உதவி மிகவும் குறைவாகவே இருப்பதால் எங்கள் பணிகளை சரிவர நடத்த முடியவில்லை. ஆகவே எங்கள் டில்லி அலுவலகத்தை நாங்கள் மூட உள்ளோம்.
முன்பு 300 பணியாளர்கள் பணி புரிந்த நிலையில் தற்போது எங்களிடம் 40 தன்னார்வ தொண்டர்கள் மட்டுமே உதவிக்கு உள்ளனர். எங்களது கணக்கு வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளாக அரசு பரிசீலித்து வருகிறது. இதுவரை எவ்வித முறைகேடும் கண்டறியப்படவில்லை. ஆயினும் எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து வருகிறது” என தெரிவித்தார்.