புனே:
பட்டப்படிப்பு முடித்தவர்களின் சான்றிதழ்களில், அவர்களின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று, அனைத்து பல்கலைக் கழகங்
களுக்கும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பாரதி வித்யாபீடத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பட்டப்படிப்பு முடித்தவர்களின் சான்றிதழ்களை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், பட்டப்படிப்பு சான்றிதழுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் புகைப்படத்தையும் இணைக்கவேண்டும்.
இது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அகாடமி வைப்பகமும், பல்கலைக் கழகங்களும் மாணவர்களின் அனைத்து ஆவணங்களின் விவரங்களையும் செப்டம்பர் மாதத்துக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சான்றிதழ்களை மாணவர்கள் தொலைத்துவிட்டாலோ, வெளிநாடு செல்ல சான்றுகள் தேவைப்பட்டாலோ, இந்த வைப்பகத்திலிருந்து எளிதாகப் பெற முடியும். மாணவர்களின் 10 வருட ஆவணங்களை செப்டம்பர் மாதத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது இலவச சேவையாகும்.
பட்டமளிப்பு விழாவுக்கு இன்னும் அங்கியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இனி வரும் காலங்களில் அங்கிக்குப் பதில் நமது இந்திய பாரம்பரிய உடைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.