டில்லி:
சிபிஐ-ன் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள்.
‘சிபிஐ இயக்குனர்கள் அலோக் வர்மா மற்றும் ராஜேஸ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, அலோக் வர்மா சிபிஐ இயக்குனர் பதவியில் மீண்டும் அமர வைக்கப்பட்டார். அதையடுத்து அவரை வேறு பதவிக்கு மத்திய அரசு மாற்றிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினா செய்தார்.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அலோக்வர்மாவின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்றும் சிபிஐ இயக்குனராக நியமிக்காதது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி விடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று சிபிஐ புதிய இயக்குனர் தேர்வு குறித்து, தேர்வு குழு கமிட்டி கூடி முடிவெடுத்தது. ஏற்கனவே இரண்டு முறை, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட தேர்வு கமிட்டி கூடி விவாதித்த நிலையில் இன்று 3வது முறையாக மீண்டும் கூடியது.
இதில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லாவை நியமித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவர் மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவராக பணியாற்றியவர் என்பதும்,1983ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.