டில்லி:

சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருப்பதால், புதிய இயக்குனர் குறித்து 3வது முறையாக இன்று நடைபெற உள்ள   தேர்வு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அலோக்வர்மாவின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்றும் சிபிஐ இயக்குனராக நியமிக்காதது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று சிபிஐ புதிய இயக்குனர் தேர்வு குறித்து, தேர்வு குழு கமிட்டி இன்று மீண்டும் கூடுகிறது.

ஏற்கனவே இரண்டு முறை, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட தேர்வு கமிட்டி கூடி விவாதித்த நிலையில் இன்று 3வது முறையாக மீண்டும் கூடுகிறது.

சிபிஐ இயக்குனருக்கான பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இதுவரை நியமிக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், இன்று நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில், சிபிஐ இயக்குனராக பதவி ஏற்கப்போவது யார் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.