பாலியா:
உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக கூட்டணி கட்சியான எஸ்பிஎஸ்பி ( SBSP-Suheldev Bharatiya Samaj Party) கட்சி தலைவரும்,மாநில அமைச்சருமான ராஜ்பர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க நாளிதழ் ஒன்று, இந்தியாவில் மதக்கலவரம் வர வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதை சுட்டிக்காட்டி பேசிய ராஜ்பர், மாநிலத்தில் பாஜகவே கலவரத்தை தூண்டி விட வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான யாத்ரிகர்கள் கும்பமேளாவில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், உ.பி. தலைமையிலான மாநில அரசு சமீபத்தில் அங்கு மாநில அரசின் கேபினட் கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சரான ஓம்பிரகாஷ் ராஜ்பர், கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்த நிலையில், பாஜகவே கலவரத்தை தூண்டும் மனைநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
கும்பமேளாவில் குவிந்துள்ள சாதுக்கள், ராமர்கோவில் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வரும் நிலையில், அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்று மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’ விதித்து உள்ளது. இந்த நிலையில் விரைவில் ராமர்கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என்று சில சாதுக்கள் அறிவித்து உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நிறுவனமும், இந்தியாவில் மதக்கலவரம் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ராஜ்பர் பாஜக அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். நாட்டில் வகுப்பு கலவரங்கள் ஏற்படாதவாகு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம், பாஜகவினர் வாக்குகளுக்கு எதையும் செய்ய முடியும், என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து தான் கும்பமேளாவில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்ததாகவும், ஆனால் யோகி அதை கண்டுகொள்ளாததால், கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறினார்.
சுகல்தேவ் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி.ராஜ்பர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களை தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளை மக்களே எரித்துக் கொள்ள வேண்டும் என்றும் , “இதுவரை இந்து – முஸ்லிம் கலவரத்தில் எந்த ஒரு அரசியல் பிரமுகராவது இறந்திருக்கிறாரா? எந்த அரசியல் பிரமுகரும் மதக்கலவரத்தில் ஏன் இறப்பதில்லை? மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களை தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை மக்களே எரிக்க வேண்டும்.
இதன்மூலம் இனி நாம் கலவரத்தில் யாரையும் எரிக்கக் கூடாது என்பதை அப்பேற்பட்ட அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.