கோபிசெட்டிப்பாளையம்:
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இன்று மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் அருகே ரூ. .13.20 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் திறமையான பணியாற்றி வருவதாகவும் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு அருகே உள்ள நாதிபாளையத்தில் ரூ.44 கோடி செலவில் 528 குடியிருப்பு வீடுகள், நம்பியூரில் ரூ.48 கோடி ரூபாய் செலவில் 528 வீடுகள், எலத்தூரில் ரூ.39 கோடி மதிப்பில் 456 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தவர், பவளமலை கோவில் அருகே 6 ஏக்கர் நிலத்தில் ரூ.6 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடை வழங்கப்படும் என்றவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் இண்டர்நெட் வசதியுடன் தொடங்கப்படும் என்று கூறினார்.
அதுபோல, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ரோபோ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து புதுப்புதுக் அறிவிப்புகளை அறிவித்துக்கொண்டே செல்கிறார். குறிப்பாக ஆசிரியர்கள் வருகை பதிவேடு, சுவையான உணவு மற்றும் சுகாதார வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுவதாக கூறி வருகிறார். ஆனால், இதுவரை அவர் கூறியுள்ள பெரும்பாலான அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்று அறிவிப்புகளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை என்று அறிவித்து உள்ளார்.