ஷில்லாங்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மேகாலயாவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடு அட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடி புகுந்தவர்களில் இஸ்லாமியரை தவிர மற்றவருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களைவையின் ஒப்புதலுக்கு அரசு காத்திருக்கிறது.

எல்லைப்புற மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம் மாநில மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்தது பதட்டத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு மாநிலமான மேகாலயாவிலும் மக்களின் போராட்டம் அதிகரித்துள்ளது.

                        தோக்லிங்

மேகாலயா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இந்த மசோதாவை உடனடியாக திரும்பிப் பெற மத்திய அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேகாலயா மாநில அமைச்சர் ஹாம்லெட்சன் தோக்லிங் கலந்துக் கொண்டார்.

அவர், “மாநிலங்களவையில் இருந்து இந்த மசோதாவை திரும்பப் பெற பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவ்வாறு செய்யவில்லை என்றால் வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரியும் நிலை ஏற்படும்.

இந்த மசோதா மதவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.   இந்த மசோதா ஒரு அரசியல் கட்சியின் நன்மைக்காக இயற்றப்பட்டுள்ளது. மேகாலயா அரசு இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிற்து. மேகாலயா அரசு ஒரு போதும் இந்த மசோதாவை ஆதரித்து மக்கள் விரோத செயலில் ஈடுபடாது” என தெரிவித்தார்.