மதுக்கடைகளை  மூடச்சொல்லியது, மதுரை நீதிமன்றம் மகாத்மாவுக்கு செய்த மரியாதை….

எதை திறக்க வேண்டுமோ ,அதை திறப்பதில்லை.

 எதை மூட வேண்டுமோ, அதை மூடுவதில்லை.

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் விமர்சனம்-இது.

இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆசிரியர்கள் போராட்டத்தை காரணம் காட்டி பள்ளிகளுக்கு பூட்டு போடப்படு கின்றன. வெயிலோ, மழையோ, வெள்ளமோ-ம துக்கடைகள் மட்டும் 12 மணி அடித்தால் ’டாண்’’ என்று கதவு திறக்கின்றன.

கிராமங்களின் சுவாசமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு தடை கேட்டு  நீதிமன்ற  கதவுகளை  ஒரு கையால் தட்டும் அரசாங்கம், மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து இன்னொரு நீதிமன்ற கதவை  மற்றொரு கையால்  தட்டும் விநோதமும்   ஒருங்கே அரங்கேறுகின்றன.

சகிக்க இயலாத இந்த முரண்களை பார்த்தும், பாராமலும் வேலை, உழைப்பு, உறக்கம்  என்று ஜனங்கள் இயங்கிக்கொண்டிருக்க – மதுரை நீதிமன்றம் ‘சபாஷ்’சொல்லும் படியான ஒரு காரியத்தை சொடுக்கு போடும்  நேரத்தில் செய்து விட்டு அடுத்த வழக்குக்குள் நுழைந்து விட்டது.

விஷயம் இது தான்.

மதுரையில் நெரிசலான அண்ணாநகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள ‘டாஸ்மாக்’ மதுபான கடையால் தினம், தினம் போக்குவரத்து ஸ்தம்பித்து போவது குறித்து ஆங்கில  நாளிதழ் செய்தி  வெளியிட்டது. இதனை படித்த மதுரை உயர்நீதி மன்ற கிளையின்    நீதிபதிகள் , இது குறித்து பொது நல மனு தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் தாக்கலான பொது நல மனுவை விசாரித்த  நீதிமன்றம், அண்ணாநகர் ‘டாஸ்மாக்’கடையை உடனடியாக மூட அதிரடி உத்தரவிட்டது.

அடுத்து பிறப்பித்த ஆணை இன்னும் அதிரடி ரகம்.

‘’காந்தி அடிகள் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் தருணம் இது. மதுவுக்கு எதிராக அவர் போராடியவர். ஜனவரி 30  அவரது நினைவு தினம். எனவே மகாத்மாவின் தியாகத்தை போற்றும் வகையில் 30 ஆம் தேதி அன்று  தமிழகம் முழுவதும்  மதுக்கடைகளை மூட வேண்டும்’’ என்றும் நீதிமன்றம்  உத்தரவிட –

தமிழகம் முழுவதும்  30 ஆம் தேதி (நேற்று) மதுக்கடைகள் அடைக்கப்பட்டன.

மகாத்மா காந்திக்கு மதுரை நீதிமன்றம் செலுத்திய மரியாதை –ஆண்டுகள் பல கடந்தும் நீதிமன்ற வரலாற்றில்  நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.

–பாப்பாங்குளம் பாரதி