போபால்
மத்தியப் பிரதேசத்தில் கடன் தள்ளுபடியில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக தெரிவித்த புகார் தற்போது பாஜக மீதே திரும்பி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வர் கமல்நாத் தனது முதல் பணியாக விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். அதை ஒட்டி கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டவர்களில் சிலர் தாங்கள் கடன் வாங்காமலே தள்ளுபடி அறிவிப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக கடன் வாங்காதவர்களுக்கு காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதாக பாஜகவினர் கிண்டலாக பேசி வந்தனர்.
முதல்வர் கமல்நாத் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது பல விவசாயிகளுக்கு கடன் அளிக்காமலே கடன் அளித்துள்ளதாக முந்தைய அரசு அறிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. அத்துடன் இந்த கடன்களை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் பெயரால் அளித்து விட்டு வங்கி அதிகாரிகளே அந்த பணத்தை பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதற்காக பல விவசாயிகளின் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நடந்த விசாரணையின் விளைவாக குவாலியரில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியின் முன்னாள் மேலாளர் முகேஷ் மாத்தூர் ரூ.120 கோடி விவசாயக் கடன் ஊழல் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை முதலில் கைது செய்யாமல் இருந்த காவல்துறை காங்கிரஸ் கட்சியின் தலையீட்டுக்கு பிறகு கைது செய்துள்ளது. இதைப் போல் ஹர்தா, செகோர், திவஸ், நீமுச், மண்டசோர், இந்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மத்தியப் பிரதேச மாநில அரசியல் நோக்கர் ஒருவர், “காங்கிரஸ் மீது குற்றம் கண்டுபிடிக்க பாஜக இந்த புகாரை கிளப்பியது. ஆனால் அது பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிக் கொணர்ந்து பாஜகவையே திருப்பி தாக்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.