திஷ்பூர்:

சாம் மாநிலத்தில் பாஜக முதல்வர் சோனாவால் கலந்து கொண்ட விழாவில் கருப்புச் சட்டை அணிந்திருந்த  3 வயதுக் குழந்தையை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் அந்த பிஞ்சு குழந்தையின் கருப்பு டிரசை அகற்றினர். அப்போது அந்த குழந்தை அழுது கண்ணீர் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக  ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சர்பானந்தா சோனாவால் இருந்து வருகிறார். இந்தநிலையில் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  முதல்வர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு அந்த பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் 3 வயது குழந்தைக்கு கருப்பு கோட்  அணிந்து வந்திருந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள், கருப்பு சட்டை அணிந்திருந்தால், அவர்களை நிகழ்ச்சிக்கு வர அனுமதி மறுத்தனர். குழந்தையின் கருப்பு சட்டையை அகற்ற வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, அந்த தம்பதியினர், தங்களது குழந்தைக்கு போட்டிருந்த கருப்பு உடையை அவிழ்த்து அகற்றிவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குழந்தையின் உடையை அதன் தாயார் கழற்றும்போது, அந்த பஞ்சிளங்குழந்தை அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என் மகன் கருப்பு சட்டை அணிந்திருந்தான்  என்று கூறி  பாதுகாப்பு காவலர் என் மகனை உள்ளே விட அனுமதிக்கவில்லை,என்று குழந்தையின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

அசாம் மாநில  அரசு நிகழ்ச்சியில் கருப்பு உடையை காரணம் காட்டி  3 வயது குழந்தையை அனுமதிக்காதது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே பிரதமர்  மோடி கறுப்புக்கொடியை கண்டு அரண்டுபோய் உள்ள நிலையில், பாஜகவினருக்கு கருப்பு என்றாலே அலர்ஜிபோல தெரிகிறது.