மும்பை

பியுபிஜி (pubg -பப்ஜி) என அழைக்கப்படும் வீடியோ கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அரசுக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த 11 வயது சிறுவன் அகாத் கடிதம் எழுதி உள்ளார்.

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் நிறுவனம் புளுஹோல் ஆகும். இந்த நிறுவனம் தற்போது பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட்ஸ் என்னும் வீடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தியது. சுருக்கமாக பியுபிஜி என அழைக்கப்படும் இந்த விளையாட்டு இளைஞரகள் மற்றும் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

இந்த விளையாட்டு வன்முறையை தூண்டுவது போல் அமைந்துள்ளதாக பல ஆரவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த அகாத் என்னும் 11 வயது சிறுவன் இந்த விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது கடிதத்தை மத்திய மின்னனு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே உள்ளிட்ட 7 பேருக்கு அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “ஆன்லைன் விளையாட்டான பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட் (பியுபிஜி) விளையாட்டை உடனடியாக நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். அந்த விளையாட்டில் வன்முறை, கொலை, கொள்ளை மற்றும் வெறியை தூண்டும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. பலர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர்.

ஆகவே உடனடியாக இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அவ்வாறு விதிக்கப்பட வில்லை என்றால் நான் சட்டபூர்வமாக உங்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். அதற்கான செலவுகளையும் விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

அகாத் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் மும்பை நீதிமன்றத்தில் தனது கோரிக்கையை வலியுறுத்தி பொது நல வழக்கு ஒன்றை தொடர உள்ளார்.