டில்லி:

ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டத்தை  நாங்கள்  செயல்படுத்துவோம்… ஏமாற்றுவதற்கு நாங்கள் பாஜக அல்ல என்று டில்லி மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கூறினார்.

சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  ராகுல்காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், காங்கிரஸ் தலைமையிலான  அரசு குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும். அதாவது, ஏழைகளுக்கு மாதந்தோறும் குறைந்த பட்ச பணம் செலுத்தப்படும் என்றும், இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள். இதனால், பசி, வறுமை எதுவும் இந்தியாவில் இருக்காது என்று புரட்சிகர திட்டத்தை அறிவித்தார்.

ராகுல்காந்தியின் இந்த புரட்சிகர திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதைக்கண்டு மிரண்டு போய் உள்ள பாஜக, இந்த திட்டம் குறித்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், ஏழைகள் ஒவ்வொருவரின்  வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடுவதாக கூறி ஆட்சியை பிடித்த மோடி, அதை செயல்படுத்தாமல்  ஏமாற்றி யதை போல ஏமாற்றும் திட்டம் இல்லை என்றவர்,  இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று உறுதி கூறினார்.

மக்களை ஏமாற்றுவதற்கு நாங்கள் பாஜக அல்ல என்று தெளிவுபடுத்திய ஷீலா, நாங்கள் சொல்வதை கண்டிப்பாக செய்வோம்…  “ராகுல் காந்தியின்  இந்த வரலாற்று அறிவிப்பு இது ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றிவிடும், லட்சக்கணக்கான மக்களிள் வாழ்க்கை  வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.