ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

42 ஆண்டுகளுக்கு முன்னர் –இந்தியாவின் தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.அப்போது பிரதமராக இருந்தவர் –மொரார்ஜி தேசாய்.காங்கிரஸ் அல்லாத நாட்டின் முதல் பிரதமர்.

அதன் பின்னர் வி.பி.சிங், வாஜ்பாய் ஆகியோர் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார்.

கொஞ்சம் பிளாஷ் பேக்.

இன்றைய கர்நாடக மாநிலம் -மதராஸ் சாம் ராஜ்யத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்த போது-அங்குள்ள மங்களூரில் 1930 ஆம்  ஆண்டு பிறந்தவர்-  பெர்னாண்டஸ்.

தனது 16 -வது வயதில் பெங்களூருவில் கத்தோலிக்க சபையில் பாதிரியராக பயிற்சி எடுத்துள்ளார். ஒத்து வரவில்லை.  பிழைப்புக்காக  1949 ஆம் ஆண்டில் பம்பாய் சென்றார்.பிளாட்பாரங்களில் படுத்து தூங்கினார். ஒரு பத்திரிகையில் பிழை திருத்துபவராக வாழ்க்கையை தொடங்கினார்.

சோசலிஸ்ட் தொழிற்சங்கத்தில் சேர்ந்து அரசியல் பயணத்துக்கு ஆரம்பமானார்.

1950 களில் பம்பாயின் அசைக்க முடியாத தொழில் சங்க தலைவராக உருவெடுத்தார்.

1961 ல் பம்பாய் மாநகராட்சி உறுப்பினராக தேர்வாகி –தனது நீண்ட நெடிய பயணத்துக்கு  அடிக்கல் நாட்டினார்.

1967 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பம்பாய் தெற்கு தொகுதியில் போட்டியிட சமயுக்தா சோசலிஸ்ட கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியது.

காங்கிரஸ் கட்சியின் வலிமை மிக்க நபரான எஸ்.கே.பட்டீலை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.

அதன் பின்னர் பெர்னாண்டஸ் விசுவரூபம் எடுத்தார்.1974 ஆம்  ஆண்டில் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த ரயில்வே ‘ஸ்ரைக்’கின்-என்ஜின்  ஓட்டுநராக  இருந்தவர் அவர். அப்போது அவர்- ரயில்வே தொழிலாளர்  கூட்டமைப்பின் அகில இந்திய தலைவராக இருந்தார்.

இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்ய இந்த ரயில்வே ஸ்டிரைக் முக்கிய காரணமாக இருந்தது.

‘மிசா’காலத்தில் போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து ஊர் ஊராய் ஓடிக்கொண்டிருந்த பெர்னாண்டஸ் -76ல் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1977-ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.பீஹார் மாநிலம் முசாபர்நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஜெயிலில் இருந்ததால் தொகுதிக்கு வரவில்லை.

3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திராவையும்,இந்தியாவையும் அதிர வைத்தார்.

மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்ற அவர்- சட்ட விதிகளை மீறிய அமெரிக்காவின் கொககோலாவை நாட்டில் இருந்தே விரட்டி அடித்து அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பித்தவர்- பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் போன்ற வெற்றிகளிலும் நாயகனாக இருந்தார்.

9 முறை நாடாளுமன்ற தேர்தலில் வாகை சூடிய பெர்னாண்டசுக்கு ,தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 10 மொழிகளை பேசத்தெரியும்.

மதராச பட்டினத்தில் ஐக்கியமாகி இருந்த ,மங்களூரில் பிறந்து பம்பாய்,பீஹார் தொடங்கி நாடு முழுதும் சுழன்றடித்து டெல்லியில் சடலமான பெர்னாண்டஸ் பெருமகனே- உங்கள் சொந்த ஊர் எந்த ஊர்?

— பாப்பாங்குளம் பாரதி