சென்னை:
தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா? என மத்திய ரசாயனத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 1ந்தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக 6 மாதங்களுக்கு முன்பே அரசாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நெகிழிக்கு (பிளாஸ்டிக்) தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.