புலந்த்சகர்
புலந்த்சகரில் கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் மொபைல் ஃபோன் கொலையாளி என ஒப்புக் கொண்டவர் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்ற வருட இறுதியில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் அருகே புலந்த்சகர் என்னும் நமரில் ஒரு பசுவின் இறந்த உடல் கிடைத்தது. அதை யாரோ கொன்றுள்ளதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடந்த சாலை மறியல் வன்முறையாக வெடித்தது. கலவரக்காரர்கள் காவல்நிலையத்தை தாக்கியதில் காவல் அதிகாரி சுபோத் குமார் சிங் மரணமடைந்தார். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த காவல் அதிகாரியை கலவரத்துக்கு இடையே பிரஷாந்த் நாத் என்னும் உள்ளூர் தலைவர் ஒருவர் சுடும் வீடியோ காட்சி வெளியாகியது. அதை ஒட்டி நாத் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் கலவரத்தின் போது அவர் அணிந்திருந்த உடைகளை கைப்பற்றினர். அதன் பிறகு நாத் தை டிசம்பர் 27 ஆம் தேதி கைது செய்து அவரிடம் நடந்த விசாரணையில் அவர் அதிகாரி சுபோத் குமாரை தாம் சுட்டதாக ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் காவல்துறைக்கு கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் மொபைல் ஃபோன் மற்றும் துப்பாக்கி பிரஷாந்த் நாத் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் வீட்டில் நடந்த சோதனையில் சுபோத் குமார் சிங் பயன்படுத்திய மொபைல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சுபோத்குமாரின் துப்பாக்கியை இன்னும் தேடி வருகின்றனர்.