திருவனந்தபுரம்
கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சோதனை இட்ட காவல்துறை பெண் அதிகாரி சைத்ரா தெரேசா அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் துணை கமிஷனராக இருந்த ஆதித்யா சபரிமலையில் பணிக்கு சென்றார். அதை ஒட்டி திருவனந்தபுரம் மகளிர் காவல் பிரிவு சூப்பிரண்ட் சைத்ரா தெரேசாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆதித்யா மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். ஆகவே சைத்ரா தெரேசாவுக்கு பணியை நீட்டித்து உத்தரவிடபட்டதால் அவர் பணியை தொடர்ந்தார்.
சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக டி ஒய் எஃப் ஐ என்னும் மார்க்சிஸ்ட் அமைப்பை சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் முறையிட்டனர். அதற்கு காவலர்கள் மறுக்கவே அவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதனால் காவல் நிலைய கண்ணாடிகள் உடைந்தன.
தப்பி ஓடிய கட்சியனரை காவல் துறையினர் தேடி வந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பதுங்கி உள்ளதாக சைத்ரா தெரேசாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை ஒட்டி அவர் காவலர்களுடன் அந்த அலுவலகத்துக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு திடீர் சோதனை நடத்தச் சென்றுள்ளார். அதர்கு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆயினும் சைத்ரா தெரேசா சோதனை நடத்தி உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதுங்கி இருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர். ஆகவே அவர்களை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திரும்பி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதல்வர் பினராயி விஜயனிடம் சைத்ரா தெரேசா குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் விளைவாக நேற்று துணை ஆணயர் பொறுப்பில் இருந்த சைத்ரா தெரேசாவை உடனடியாக பழைய பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆதித்யாவின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டுளார்.