ஸ்வால்

குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.   இதில் மதக் காரணங்களுக்காக வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி 2014ஆம் வருடம் டிசம்பர் 31 க்கு முன்பு இந்தியா குடிபுகுந்துள்ளவர்களில் இஸ்லாமியரை தவிர மற்றவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோரம் தேசிய அணி ஆட்சி செய்து வருகிறது.   இந்தக் கட்சிக்கு சட்டப்பேரவையில் உள்ள 40 இடங்களில் 26 இடங்கள் உள்ளதால் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடந்து வருகிறது.   மாநிலத்தின் முதல்வராக சொரம்தங்கா பதவி வகித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சட்டத் திருத்ட மசோதாவை எங்கள் அரசு எதிர்க்கிறது.   இந்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் எங்கள் கட்சியினர் வாக்களிப்பார்கள்   தேவைப்பட்டால் பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளவும் கூட்டணியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வரும் நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.