பெண்கள் குறித்து தவறாக பேசியதால் இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் நியூலாந்து உடனான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இணைய வாய்ப்பு உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபலங்கள் பங்கேற்கும் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் கலந்து கொண்டனர். நிக்ழ்ச்சியில் பேசிய ராகுல் பெண்களை குறித்து தவறான கருத்து வெளிப்படுத்தினார். இதற்கு பலதரப்பில் இருந்தும் கணடனங்களும், எதிர்ப்புகள் வலுத்தன.
இதன் காரணமாக நிகழ்ச்சியில் பேசியதற்கான விளக்கத்தை இருவரிடமும் பிசிசிஐ கேட்டிருந்தது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போட்டிகளில் பங்கேற்கு பாண்டியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. இதனை தொடர்ந்து இருவரும் பிசிசிஐக்கு விளக்கம் அளித்தனர். ஆனால், இருவரின் விளக்கமும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என பிசிசிஐ கூறியதை அடுத்து கடந்த 11ம் தேதியில் இருந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருவருக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த இருவரின் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதியதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நம்பிக்கை ஆலோசகர் பிஎஸ் நரசிம்மாவை கலந்தாலோசித்த பின்னரே இருவரின் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ நீக்குவதாக கூறியுள்ளது.
எனினும் பெண்கள் குறித்து பொதுநிகழ்ச்சியில் பேசியதால் இதன் விசாரணை நிலுவையில் உள்ளது என்றும், இதற்காக குறைதீர்ப்பளர் ஒருவரை நியமித்து விசாரணை நடத்தப்படும் எனவும், அதற்கான விசாரணை பிப்ரவரி 5ம் தேதி தொடங்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நியூசிலாந்து பயணத்தில் உள்ள இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இணைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை நெருங்குவதை தொடர்ந்து கேப்டன் விராட் கோலிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியாவை தேர்வுக்குழு பரிந்துரைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.