சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி செலுத்தாதல், அவரது ஜெ. போயஸ் தோட்ட  வீடு முடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை  தெரிவித்து உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக ஆக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற  வழக்கின் விசாரணையின்போது, ஜெ.வின் வருமான வரி பாக்கி குறித்து கேள்வி எழுந்தது. அதுகுறித்து பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெ. போயஸ் தோட்ட இல்லத்துக்கான வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த  2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட பட்டியலில் உள்ளது.  மறைந்த ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு  6 கோடியே 62 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இதன் காரணமாக ஜெ.வீட்டை முடக்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.  அதுபோல, சென்னை அண்ணா சாலை, மேரீஸ் சாலை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளும் முடக்கத்தில்  இருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

ஜெ.வின் போயஸ் தோட்ட இல்லம்,  முடக்கத்தில் இருந்தாலும் அதை  நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து,  ஜெயலலிதாவின் வருமானவரி பாக்கியை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து தமிழக  அரசு. 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தது.