டில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இளந்தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றது முதல், கட்சியை வலுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இளைஞர்களையும், காங்கிரஸ் தொண்டர்களையும் அரவணைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார்.
சமீப காலமாக நாடு முழுவதும் நடைபெற்றுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்குநெருக்கடி கொடுக்கும் வகையில், கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்க பிரியங்கா காந்தியை ராகுல்காந்தி நியமனம் செய்துள்ளார்.
இவர், மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அடங்கி உள்ள உ.பி. மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பிரியங்காவுக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே பிரியங்காவை களத்தல் இறக்க காங்கிரஸ் தொண்டர்கள் தலைமையில் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், தற்போது பிரியங்காவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கி உள்ளார் தலைவர் ராகுல்காந்தி.
பிரியங்கா காந்தி ஏற்கனவே தனது தாயார் சோனியாவின் ரேபரேலி தொகுதியை கவனித்து வருகிறார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.