டில்லி
மாருதி ஆல்டோவின் போட்டிக் காரான டிசைர் சேடன் கார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற வருடம் அதிக விற்பனை ஆகி உள்ளது.
கார் வாங்குபவர்கள் பெரும்பாலும் சிறிய கார்களை விரும்பி வாங்கி வந்தனர். மாருதி நிறுவனத்தின் அல்டோ அவ்வகையில் பல வருடங்களாக அதிக விற்பனையில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய டிரெண்டின் படி பலரும் பெரிய கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மக்களின் வருமானம் பெருகியதாகவும் இருக்கலாம். அல்லது மக்கள் அதிக வசதிகளை விரும்பியதாலும் இருக்கலாம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017 ஆம் வருடம் அதிக விற்பனையான காரான மாருதி ஆல்டோ 2018 ஆம் வருடம் விற்பனையில் 0.4% குறைந்துள்ளது. அதனால் தற்போது அது இரண்டாம் இடத்துகு வந்துள்ளது. அதே நேரத்தில் பெரிய காரான டிசைர் சேடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒரு வருடத்தில் இந்த காரின் விற்பனை 17.6% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 33.6% விற்பனை அதிகரித்த போதிலும் ஸ்விஃப்ட் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிசைர் சேடன் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வலுவான கார் என பெயர் பெற்றது. ஆயினும் மாருதி ஆல்டோ விலை ரூ.2.6 லட்சமாக இருந்ததும் டிசைர் சேடன் விலை ரூ.5.7 லட்சம் விலையாக இருந்ததும் மாருதி ஆல்டோவின் விற்பனையை அதிகரிக்க செய்ததௌ. ஆனால் மக்களின் கார் என புகழப்பட்ட மாருதி ஆல்டோவுக்கு தற்போது சந்தையில் கிராக்கி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தொழில்துறை ஆர்வலர் ஞானேஸ்வர் சென், “இந்தியாவில் கார் வாங்குபவர்கள் தற்போது அதிக வசதிகளை விரும்புகின்றனர். அத்துடன் அவர்களால் அதிகபட்சம் வாங்கக் கூடிய தொகையில் கார்களை வாங்க விரும்புகின்றனர். முதல் முதலாக கார் வாங்குபவர்கள் பொதுவாக ஓரளவு ஆடம்பரக் கார்களை விரும்புவதால் இந்த விற்பனை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முதல் கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதே உண்மை.” என தெரிவித்துள்ளார்.
சமூக பொருளதார ஆர்வலரும் விளம்பர தொழிலதிபருமான சந்தோஷ் தேசாய், “இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். வருமானம் அதிகரிக்கும் போது மக்கள் வசதியை எதிர்பார்ப்பது சகஜமே. அவ்வகையில் வசதியான கார்களுக்கு பணம் இல்லாதவர்கள் சிறிது காத்திருந்து கார் வாங்க தீர்மானிக்கின்றனர். அத்துடன் வசதியான கார் என்றால் அதிக விலை அளிக்க தயாராக உள்ளனர்.”என கூறுகிறார்.
அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து டிசைர் சேடன் முதல் இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.