சென்னை

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவன் கோகுல் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. விசாரணையை தொடர்ந்து, போராட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசு பணிகள் முடங்கி உள்ளன. மேலும் பல பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக 2 நீதிபதிகள் அமர்வு முன்பு முறையிடப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி, பிளஸ்2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதால், தற்சமயம் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார். அதைத் தொடர்ந்து, மதுரையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த ஆவனங்களை உடனே அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள்  நாளை இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி வழக்கை ‘தள்ளி வைத்தார்.

நாளைய விசாரணையை தொடர்ந்தே அரசு ஊழியர்கள் போராட்டம் தொடருமா அல்லது முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்பது தெரிய வரும்.