நாக்பூர்

வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிகம் அவதியுறுவதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

பாஜகவின் தாய் இயக்கம் என கூறப்படும் ஆர் எஸ் எஸ் கடந்த சில தினங்களாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.   ராமர் கோவில் கட்ட அவசரச் சட்டம் இயற்ற பிரதமர் மோடி ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.  இது குறித்து ஆர் எஸ் எஸ் பொதுச் செயலர் சுரேஷ் பையாஜி, “இப்போது ராமர் கோவில் கட்ட முடியவில்லை எனில் 2025ல் தான் (அதாவது 2024 பொதுத் தேர்தலுக்கு பின்) கட்ட முடியும்” எனக் கூறினார்.

அந்த கருத்து தெரிவிகப்பட்ட ஒரு சில தினங்களுக்குள் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பாஜக அரசை தாக்கி உள்ளார்.  நேற்று ஆர் எஸ் எஸ் இயக்கம் சார்பில் நாக்பூரில் விழா ஒன்று நடைபெற்றது.   அந்த விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

மோகன் பகவத், “ஒரு நாடு சுதந்திரம் பெற போராடும் போது பலர் உயிர்த் தியாகம் செய்ய நேரிடும்.   அப்படி இல்லை எனில் அந்நாட்டுக்கும் எதிரி நாட்டுக்கும் இடையில் போர் மூண்டால் போர் வீரர்கள் உயிர் தியாகம் செய்ய நேரிடும்.    ஆனால் நமது நாட்டில் சுதந்திரப் போராட்டம் நடைபெறவில்லை.  போரும் நடக்கவில்லை.

அப்படி இருக்க எல்லைப் பகுதிகளில் ஏராளமான போர் வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.   அது மட்டுமின்று அந்த பகுதியில் பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.  அரசின் சரியான கொள்கை இல்லாததால் இத்தகைய மரணங்கள் ஏற்படுகின்றது.    அரசின் சரியான கொள்கை இன்மையால் நீங்களும் நானும் துயருறுகிறோம்.

அரசின் கொள்கை சரியில்லாததால் நாட்டில் வேலையிலாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.   தவறான பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரம் வீழ்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.    இது நானோ நீங்களோ செய்த தவறு இல்லை.   ஆயினும் இதனால் மக்களாகிய நாம் துயருறுகிறோம்.

இதற்கான தீர்வு காண வேண்டியது நாம்தான்.  இதில் யாருக்கும் ஒப்பந்தம் அளித்து தீர்வு காண முடியாது.  நாம் இதை அரசு செய்யும், காவல்துறையினர் செய்வார்கள், ராணுவம் செய்யும் என விட முடியாது, மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து  இதற்கான தீர்வு காண வேண்டும்” என தனது  உரையி;ல் கூறி உள்ளார்.