சென்னை
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தில் காணும் பொங்கல் மிகவும் முக்கியமானதாகும். இன்று அனைத்து மக்களும் பல இடங்களுக்கு சென்று மகிழ்ச்சி அடைவது வழக்கம். சென்னைக் கடற்கரைகளில் அதுவும் மெரினா கடற்கரையில் ஏராளமானோர் வருவது வழக்கமாகும்.
இதை ஒட்டி காவல்துறையினர் கடற்கரை செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காமராஜர் சாலையில் பொதுமக்கள் சாலையில் முழுவதுமாக நிரம்பும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது.
* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும்போது, கீழ்க்கண்ட மாற்றங்கள் நடக்கும்.
* அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கினை அடையலாம்.
* கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலை ஒரு வழிப்பாதையாக இருக்கும்.
* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில், பெல்ஸ் சாலையில் வாகனங்கள் நுழையாத வண்ணம் வாகனங்கள் திருப்பப்படும்.
* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.