டில்லி

ர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு ரூ.122 கோடியும் வடகிழக்கு மாநிலங்களில் ரூ. 14 கோடியும் செலவு செய்ததாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு அளித்துள்ளது.

கடந்த வருடம் நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத ஆகிய கட்சிகள் களம் இறங்கின. மூன்று கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைத்தது.

அத்துடன் சென்ற வருடம் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. தற்போது பாஜக இந்த தேர்தலில் தங்கள் கட்சியின் செலவுக்கான கணக்கை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளது.

அதன்படி கர்நாடக மாநில தேர்தலுக்கு ரூ.122.68 கோடி செலவானதாக தெரிய வந்துள்ளது. சென்ற வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடந்த வடகிழக்கு மாநிலங்களில் ரூ.14.18 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் மேகாலயாவில் ரூ.3.8 கோடியும், திரிபுராவில் ரூ.6.96 கோடியும், நாகாலாந்தில் ரூ.3.36 கோடியும் செலவாகி உள்ளது.

இந்த செலவு நட்சத்திர வேட்பாளர்களின் பிரசார செலவு, தேர்தல் பிரசார செலவு, மீடியா, விளம்பரம், ஊர்வலங்கள், ஹெலிகாப்டர் கட்டணங்கள், தேர்தல் அறிக்கை, மற்றும் வேட்பாளர்களும் மற்றவர்களும் செய்த போக்குவரத்து செலவுகள் ஆகும்.