சண்டிகர்
சண்டிகர் நகர மேயர் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக பிரமுகர் ராஜேஷ் காலியா போக்கிரிகள் பட்டியலில் இடம் பெற்றவர் ஆவார்.
சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 26 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 9 நியமன உறுப்பினர்களும் உள்ளனர். வருடத்துக்கு ஒருவர் மேயராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. தற்போது நகரட்சியில் 20 பாஜக, நான்கு காங்கிரஸ், ஒரு அகாலி தளம் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் உள்ளனர்.
இந்த வருட மேயராக தலித் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும். இந்த 20 பாஜக உறுப்பினர்களில் ராஜேஷ் காலியா, சதிஷ் கைந்த், பரத் குமார் மற்றும் பிரமிளா தேவி ஆகியார் தலித் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள். இவர்களில் ராஜேஷ் காலியா மேயர் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் மனு அளித்துள்ளார்.
சண்டிகர் நகராட்சியில் துப்புறவு தொழிலாளராக பணியாற்றிய ராஜேஷ் காலியா கடந்த 1984 ஆம் வருடம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு 1986 ஆம் வருடம் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு தேர்தல் பனி ஆற்றினார். அதன் பிறகு அவர் கடந்த 2011 ஆம் வருடம் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு மீண்டும் 2016 ஆம் வருட நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
ராஜேஷ் காலியா மீது 1994 ஆம் வருடம் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின் சூதாட்ட தடை சட்டத்தின் கீழ் 2001 ஆம் வருடம் மீண்டும் தண்டனை அளிக்கப்பட்டது. இதை தவிர நான்கு முறை அவர் மீது கலவர வழக்கு பதியப்பட்டுள்ளது. அதைத் தவிர வீடுபுகுதல், பெண்ணிடம் தவறாக நடந்து பலாத்காரம் செய்ய முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சண்டிகர் காவல்துறையினர் அவரது பெயரை போக்கிரிகள் பட்டியலில் ஏ பிரிவில் வைத்துள்ளனர். சமீபத்தில் அவர் பெயர் ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏ பிரிவு என்பது தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் ஆவார்கள். அவர்கள் சில காலம் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருந்தால் பி பிரிவுக்கு மாற்றப்படுவார்கள். அதன் பிறகு ஒரு வருடம் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருந்தால் போக்கிரிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது சண்டிகர் மாநில சட்டமாகும்.