போபால்

த்தியப் பிரதேசத்தில் முந்தைய பாஜக அரசு செய்த மாபெரும் ஊழல் நடந்துள்ளது கணக்கு தணிக்கையில் தெரிய வந்துள்ளதாக முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அதில் மத்தியப் பிரதேச மாநிலமும் ஒன்றாகும். தற்போது மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பொறுப்பேற்றுள்ளார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மத்திய பாஜக அரசின் ரஃபேல் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளே ஆகும் என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

சென்ற வருடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த திட்டங்கள், வரவு செலவு ஆகிய இனங்களின் கணக்கு தணிக்கை மற்றும் மேற்பார்வையாளர் அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், “இந்த தணிக்கை அறிக்கை மூலம் முந்தைய பாஜக அரசின் பொருளதார முறைகேடுகளும் தவறான நிதி நிர்வாகமும் வெளி வந்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் முந்தைய அரசு அறிவித்த திட்டங்களால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து நாங்கள் விசாரணை நடத்த உள்ளோம். விரிவான புலனாய்வு நடத்தப்பட உள்ள்து. ஒரு மக்கள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அவர்களிடம் இது தொடர்பான ஆவணங்கள் அளிக்க உள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசுக்கு இழப்பு அளிக்கும் வகையில் செயல்பட்ட யாரையும் நாங்கள் தண்டனையில் இருந்து தப்ப விடமாட்டோம். தணிக்கை அறிக்கை என்பது ஒரு டிரெய்லர் மட்டுமே. விசாரணையில் முழுத் திரைப்படமும் வெளியாகும்.

இந்த முறைகேடுகளால் அரசின் நீர் வளத் துறை, பொதுப்பணித்துறை, மற்றும் நர்மதா நதி நீர் திட்டம் ஆகியவைகளில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துறைகளில் 242 திட்டஙக்ள் முடிக்கப்படாமல் உள்ளன. ஆனால் அதற்கு மதிப்பிடப்பட்ட ரூ.4800.14 கோடிக்கு பதில் ரூ. 9557.10 கோடி ரூபாய் செலவாகி உள்ளன. இதில் 24 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பிரசாரத்தில் நாடெங்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக மும்முரமாக இறங்கி உள்ள சமயத்தில் இந்த தணிக்கை அறிக்கை பாஜகவுக்கு ஒரு அதிர்ச்சியான ஒன்றாகும். அத்துடன் காங்கிரஸ் கட்சி இது டிரெயிலர் மட்டுமே என கோடிட்டு காட்டி உள்ளதால் மேலும் பல ஊழல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.