சென்னை:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வரும் 18-ம் தேதி பாஜக தொடங்குகிறது.


தமிழகத்தில் அதிமுகவோடு நெருக்கமாக இருந்தபோதிலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி பலவீனம் அடைந்துள்ளதாக பாஜக கருதுகிறது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் இதுவரை இறுதியான முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதுதவிர, சமீபகாலமாக மோடிக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்த் கூறிவருகிறார்.

இதனால் பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பு சந்தேகமே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீர்க்கதரிசி அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1990-ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைத்து வெற்றி கண்டார். அதில் திமுகவும் இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் தேர்தலில் பழைய நண்பர்களோடு கூட்டணி அமைக்க பாஜக தயாராக இருக்கிறது என திமுகவை மறைமுகமாக கோடிட்டு மோடி கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல என்று பதில் அளித்தார். மேலும் பாஜகவோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் எவை என்று அடையாளம் காணுவதற்காகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல் வரும் 18-ம் தேதி சென்னை வருகிறார்.