பழனி:,

ழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15)  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது.

தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த அறுபடை  வீடுகளில் 3- வது படை வீடாகத் திகழ்வது பழனி. இங்கு முருகன் தண்டாயுதபாணி என்ற பெயரில், ஆண்டிக் கோலத்தில்  காட்சி யளிக்கிறார்.

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தை யொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தையொட்டி  ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த தைப்பூச திருவிழா வுக்கு  பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து முருகன் கோவிலுக்கு வருவது வழக்கம். லட்சணக்கான பக்தர்கள் நடந்தும், காவடி தூக்கியும் பழனிக்கு வருகை தருவார்கள்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஜனவரி 14ந்தேதி (நாளை) கொடியேற்றப்படுகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் விழா  தொடங்குகிறது.  முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் வரும் 21 ம் தேதியும், தெப்பத்திருவிழா 24ம் தேதி இரவும் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து தினசரி பூஜை புணஸ்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வரும் 20 ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அன்று இரவு  7.45 மணிக்கு வெள்ளித்தேர் உலாவும் நடைபெறுகிறது.

அதையடுத்து தைப்பூச திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 21 ம் தேதி நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் தேரடியில் மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி தேர் ஏற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் ஜனவரி 19 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது.

தைப்பூசத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேரோட்டமும், திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.

தைப்பூசம் திருவிழாவையொட்டி, பழனிக்கு 300க்கும் மேற்பட்ட  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

அதுபோல திருத்தேரோட்டம் நடைபெறும்  21.01.2019 அன்று  திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட அளவு பணியாளர்களோடு செயல்படும் என்றும்,   உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்ய வருகின்ற 02.02.2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.