புதுடெல்லி:
உத்திரப் பிரசேத்தில் பாஜக அரசு நிகழ்த்திய போலி என்கவுன்டர்கள் குறித்து,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடத்திய 420 என்கவுன்டர்களில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 2018-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 1.038 என்கவுன்டர்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் நேரடியாக களத்தில் சென்று 14 குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்ட என்கவுன்டர் என பெரும்பாலோர் தெரிவித்தனர்.
இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அதிகாரிகள் கூறியதாவது:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுன்டர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி விசாரணை நடத்த அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் இந்திய அரசின் அலட்சிப் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.
பெருமபாலான என்கவுன்டர்கள் போலீஸ் காவலிலேயே நடந்துள்ளன. இந்த என்கவுன்டர்கள் எல்லாம் தற்காப்புக்காகவே நிகழ்த்தப்பட்டதாக உத்தரப் பிரதேச போலீஸார் அடிக்கடி கூறி வந்தனர்.
மக்களை பாதுகாப்புப் படையினர் கொன்றது தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக மக்கள் உரிமை அமைப்பு கடந்த 2014-ல் தொடர்ந்த வழக்கில், என்கவுன்டர் வழக்குகளில் வகுக்கப்பட்ட வழிகாட்டு முறைகளை இந்திய அரசு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு, கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த என்கவுன்டர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், என்கவுன்டரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை தரவேண்டும், இது குறித்த விசாரணையை சுதந்திரமான விசாரணை அமைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதனை இந்திய அரசு நிறைவேற்றவில்லை.
உத்திரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, என்கவுன்டரில் பலியானவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக உள்ளனர். மணிப்பூர் என்கவுன்டர்கள் சம்பவம் இதை உறுதி செய்கிறது. பெரும்பாலோர் துன்புறுத்தப்பட்டு என்கவுன்டர் நிகழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டர்கள் குறித்து இந்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டர்கள் குறித்து எங்களது கண்டத்தையும், ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு ஐநா சபையின் மனித உரிமைகள் பிரிவு அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.